வெள்ளி, 18 நவம்பர், 2016

5S முறைமை

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது பேரழிவுகளைச் சந்தித்து சுடு காடாக மாறிய யப்பான், மிகக் குறுகிய காலத்திற்குள் எழுச்சிகொண்டு, உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் அளவுக்கு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் உயர் தொழினுட்பத்திறன் மிக்க நாடாக, கிழக்காசியாவின் மையமாக யப்பான் விளங்குகின்றது.
யப்பானுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. மேலைத் தேசத்தவரின் ஆட்சிக்கெதிராகப் போரிட்டு வெற்றியடைந்து சுதந்திர தேசிய அரசினை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலை நாட்டிய ஆசிய நாடென்ற பெருமை அதனைச் சாரும்.
அதனுடைய உற்பத்திப் பொருட்கள் சர்வதேச சந்தையில் அதிக கேள்வியுடையவையாகக் காணப்படுகின்றன.
முறையான திட்டமிடலும், ஓய்வின்றிய உழைப்புமே யப்பானின் அதீத வளர்ச்சிக்குக் காரணமாகும். யப்பானியர்கள் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர்கள். அதியுச்ச அளவில் நேரத்தைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு நடைமுறைகளைப் பயன்படுத்துபவர்கள்.
எவனொருவன் தனது பொருட்களை, அதற்குரிய இடத்தில் ஒழுங்காக வைப்பதற்கு ஒரு நிமிடத்தை செலவளிப்பதற்கு பின் நிற்கிறானோ, அவன் அப்பொருளைத் தேடுவதற்கு ஐந்து நிமிடங்களைச் செலவளிப்பான்என்னும் கருத்தில் யப்பானியப் பழமொழியொன்றும் உள்ளது. யப்பானியர்களின் கணிப்பின்படி 60 வயது வரை வாழுகின்ற ஒரு மனிதன், தன் வாழ்நாளில் ஏறத்தாழ 20 வருடங்களை தனது பொருட்களைத் தேடுவதிலேயே செலவு செய்கின்றானாம்.
நேரத்தின் கட்டுப்பாட்டில் தாம் இயங்காமல், நேரத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் யப்பானியர்கள் வல்லவர்கள். நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், வாழ்க்கையை இலகு படுத்துவதற்காகவும் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே 5S முறைமையாகும்.
5S முறைமை மாதிரியானது யப்பானின் முகாமைத்துவ முறையியலாகும். இதனை டொயோட்டா 5S மாதிரி எனவும் அழைப்பர்.
ஐந்து யப்பானிய வார்த்தைகளால் முன்வைக்கப்பட்டுள்ள இம்முறைமை தரம்மிக்க தூய்மையினைக் குறித்து நிற்கின்றது.
ஆரம்பத்தில் யப்பானிய நிறுவனங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த இம்முறையானது பின்னர் யப்பானியர் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையுடன் இணைந்து, இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தற்போது உலகளாவிய ரீதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
யப்பான் நாட்டினதும், யப்பானிய நிறுவனங்களினதும் வெற்றிக்கு காரணமாக அமைந்த 5S மாதிரி பின்வரும்  ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

Seiri    
தேவையில்லாதவற்றை அவ்விடத்திலிருந்து அகற்றுதல் - Sort      
Seiton  - 
தேவையானவற்றை தேவையான இடத்தில் வைத்தல் - Systematize
Seiso     -
தூய்மையாக வைத்திருத்தல் - Shine
Seiketsu -
தரப்படுத்தல் - Standardize
Shitsuke -
நிலையான ஒழுக்கம் - Discipline

இம்முறையானது யப்பான் நாட்டுக்கு மாத்திரம் அல்லது யப்பானிய நிறுவனங்களுக்கு மாத்திரம் பொருத்தமானது என்று கருதினால் அது தவறானது. இக்கோட்பாடானது எல்லா நாட்டுக்கும்,எல்லா அலுவலகங்களுக்கும், எல்லாப் பாடசாலைகளுக்கும், எமது வசிப்பிடங்களுக்கும் பொருத்தமானது.
யப்பான் அறிமுகப்படுத்திய இம்முறைமை இன்று உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் அனைத்திலும், சிறிய அமைப்புக்கள் முதல் பாரிய அமைப்புக்கள் வரையான நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் 5S முறைமையை முதன் முதலாகப் பயன்படுத்தியவர்கள் சில்லறை வியாபாரிகள்தான். 5S முறைமை தொடர்பான எந்தவொரு அறிமுகமோ அறிவோ அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தமது வியாபார வசதி கருதி, அவர்கள் தமது விற்பனைப் பொருட்களை அடுக்கி வைத்துப் பயன்படுத்திய விதம் யப்பானியர்களின் 5S முறைமையை ஒத்ததாக இருந்திருக்கின்றது.
எமது வியாபாரிகள், சில்லறை வியாபாரி முதல் மொத்த வியாபாரி வரை…… மரக்கறி வியாபாரி முதல் மீன் வியாபாரி வரை……. தங்களை அறியாமலே இம்முறையைப் பயன்படுத்துவதால்தான் அவர்களால் வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது.
வீட்டை ஒழுங்குபடுத்தும் போது இம்முறையைப் பின்பற்றவோமாயின் எமது வீட்டின் ஒவ்வொரு இடமும் எவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
சுவாமியறை,
வரவேற்பறை,
படுக்கையறை,
அடுக்களை,
மாணவர்களின் படிக்கும் அறை,
எத்தனை அழகாக இருக்கும்?
இங்கு ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. தேவையில்லாதவற்றை அகற்றுதல் என்னும் நடைமுறை அல்லது பழக்கம் எம்மவரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடையே அறவேயில்லை. அறுந்து போன பழைய செருப்புக்களைக் கூடபிறகு பயன்படும்என்று கட்டித் தொங்கவிடும் பழக்கம் உடையவர்களே நாங்கள்! அதற்கேற்றாற்போலசிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்என்று பழமொழியை வேறு உருவாக்கி வைத்திருக்கின்றோம்.
இரண்டு வருடங்கள் மட்டுமே பாவித்திருக்கக் கூடிய பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டியை   யப்பானியர்கள் இருவர் - கணவனும் மனைவியுமாக - தூக்கி வந்து குப்பை வாகனத்தில் வீசியதை நான் பார்த்து வியந்திருக்கின்றேன்.
அதனால்தான்யப்பானியர்களினால் அந்தப் பழக்கத்தினால்தான் - நுளம்பை சிறுபிள்ளைகளுக்கு காட்ட வேண்டுமாயின், நுளம்பை வளர்க்கும் ஆய்வு கூடங்களுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்ல வேண்டிய நிலையில் யப்பானியர்கள் இருக்கிறார்கள்.
5S முறைமையின் பிரயோகமொன்றை சற்று ஆளமாகச் சிந்திப்போமா?
மனிதன் தனது மூளையில், இந்த ஐந்து விடயங்களையும் பிரயோகிக்க முடியுமாயின் அவனது அறிவு எப்படியிருக்கும்? வாழ்க்கை எப்படி அமையும்? ஆச்சரியப்படுவதற்கு நேரம் இல்லாத அளவுக்கு அவனது சாதனைகள் உலகை வலம் வரும் அல்லவா!
தற்போது இலங்கையின் பெரும்பாலான பாடசாலைகளிலும் இம்முறையானது ஒரு சிறிய மாற்றத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 5S முறைமையில் மேலதிகமாக பாதுகாப்பு (Security) எனும் விடயத்தையும் உள்ளடக்கி 6S முறைமை என்னும் பெயருடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பிள்ளைகளின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே இம்மாற்றம் மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் கூட 6S முறைமையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தேசிய ரீதியில் கல்வி அமைச்சினால் பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை, யா / கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தேசிய ரீதியில் பரிசில்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையை திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம்  நாமும் எமது நிறுவன நடவடிக்கைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் இலகுவானதாகவும், அழகானதாகவும், சந்தோஷமானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும். அதன் மூலம் யப்பானியர்களின் சாதனைகளை எட்டிப்பிடிப்பதற்கான ஆரம்பப் பணியின் முதற்படியில் காலடி எடுத்து வைக்கவும் முடியும்.
தேடலும் ஆக்கமும் :
ம.நிரேஸ்குமார்
ஆசிரிய கல்வியியலாளர்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி,
கோப்பாய்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

அருகிவரும் வாசிப்புப் பழக்கமும் வாசிப்பின் முக்கியத்துவமும்

வாசிப்புப் பழக்கமானது தற்போதைய காலத்தில் மிக வேகமாக அருகி வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றபோதும் அவற்றில் எந்தவொரு காரணமும் ஆமோதித்து ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று. ஏனெனில்வாசிப்பைதவிர்த்து ஒரு மனிதனின் வாழ்வு நிறைவுடையதாக அமைய முடியாது.

வாசிப்பு என்றால் என்ன? என்ற வினாவுக்கான தேடல் மிகப் பரந்தது. வாசிப்பு என்பது ஒரு விஞ்ஞான ரீதியிலான செயற்பாட்டுக்கு ஈடானது. முக்கியத்துவமானது. அதனால் தான்வாசிப்பு ஒரு செயன்முறையாகக் கருதப்படுகின்றது.
வாசிப்பு : வாசிப்பு என்பது எழுத்துக்கள், குறியீடுகளிலிருந்து கருத்தொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சிக்கலான அறிவு சார்ந்த செயன்முறையாகும். இதுமொழிப் பயன்பாட்டினைப் போன்று - தொடர்பாடலை மேற்கொள்ளவும், தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளவும் பயன்படுகின்ற, வாசகருக்கும் - எழுத்துக்களுக்கும் இடையிலான சிக்கலான ஒரு இடைத்தொடர்பாகும். இது வாசகரது முன்னறிவு, மொழியறிவு, அனுபவம், உளப்பாங்கு, ஆகியவற்றால் சமூக கலாச்சார நிலைமைகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது.
வாசிப்புச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு தொடர்ச்சியான பயிற்சி, அப்பயிற்சியில் விருத்தி புத்துருவாக்க சிந்தனை, ஆக்கத்திறன், சிக்கலான விடயங்களை பகுப்பாய்வு செய்யும் திறன்  என்பன அவசியமாகும்.
வாசிப்பு  என்பதற்குக் கொடுக்கப்பட்ட மேற்படி வரைவிலக்கணத்திலிருந்தே வாசிப்பின் முக்கியத்துவத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா!
வாசிப்புப் பழக்கமானது தற்பொழுது மிக வேகமாக அருகி வருகின்றது. வாசிப்புப் பழக்கத்தைக் குறைப்பதில் அல்லது முற்று முழுதாக இல்லாதொழிப்பதில் இலத்திரனியல் ஊடகங்களும், இலத்திரனியல் சாதனங்களும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றன என்பது மிக வருத்தத்திற்குரிய, மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.
தற்போதைய கால கட்டத்தில் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என ஒரு பக்கமாகவும் இலத்திரனியல் பத்திரிகைகள், இலத்திரனியல் சஞ்சிகைகள், இலத்திரனியல் புத்தகங்கள் என ஒரு பக்கமாகவும் இணையம், முகநூல், ருவிற்றர் என ஒரு பக்கமாகவும் மும் முனைத் தாக்குதலிலிருந்து தப்பித்து ஒரு மனிதன் வாசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருக்கின்றான்.
இலத்திரனியல் ஊடகங்களையோ அல்லது இலத்திரனியல் சாதனங்களையோ குறைத்து மதிப்பிடுவதோ, குறை காண்பதோ, பரிகாசம் செய்வதோ இக் கட்டுரையின் நோக்கம் அல்ல!
எனவே இவை எவ்விதமாக வாசிப்புப் பழக்கத்தைக் குறைத்து வருகின்றன அல்லது இல்லாதொழிக்கின்றன என்பதை ஆராய்வதும் இங்கு அவசியமாக அமையவில்லை.
வாசிப்பு என்னும் பொழுது பெரும்பாலும் புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் சார்ந்த வாசிப்பே கருதப்படுகின்றது. மின்னல்; வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் உலகில் அன்றாட நிகழ்வுகள் தொடக்கம் ஆழமான ஆய்வுகள் வரை பல வகையான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், அறிவை இற்றைப்படுத்திக் கொள்வதற்கும், நல்ல பண்புகளை வளர்த்து உன்னதமான மனிதனாக மாறுவதற்குத் தேவையான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பெற்றுக் கொள்வதற்கும்  பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் அளப்பரிய பங்களிப்பினைச் செய்து வருகின்றன.
நல்ல நூல்கள் நம் கையிலிருந்தால் அவை எமக்கு அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக, சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும்.
எம்மில் மறைந்திருக்கும் ஆற்றல்களைக் கண்டு பிடிப்பதற்கும், தெளிவான சிறந்த அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் வாசிப்புப் பழக்கம் மிக முக்கியமானது. கலைகளைப் படிப்பதும் ஒரு கலைதான். அக்கலைகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட கலைதான் வாசிப்புக்கலை.
வாசிப்புத்திறன் மிக்க மாணவன், பேச்சுத்திறன் மிக்கவனாகவும், ஞாபக சக்தி மிக்கவனாகவும், விடயங்ளை புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவனாகவும், பொது அறிவு மிக்கவனாகவும் விளங்குவான் என்பது ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அவன் அறிவாற்றல் மிக்கவனாகவும், வாழ்வில் மேம்பட்டவனாகவும் விளங்குவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உலகமறிந்த சில உன்னத மனிதர்களின் வாழ்வில் நடந்த சில சம்பங்களைப் பார்ப்போமாக இருந்தால், வாசிப்புப் பழக்கமே அவர்கள் தங்கள் வாழ்வில் அவ்வாறான உன்னதமான நிலையையடைந்து, உலக வரலாற்றின் சில பக்கங்களைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள உந்து சக்தியாக இருந்தது என்பது தெளிவாகும்.
இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய மாவீரன் பகவத்சிங் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பதாகக் கூடப் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தானாம்.
மகாத்மா காந்தியிடம்உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது  “மிகச் சிறந்த நூலகம் ஒன்றை அமைப்பேன்என்றாராம்.
யாருமற்ற தனிமைத் தீவில் தள்ளி விடப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று ஜவஹர்லால் நேருவிடம் கேட்கப்பட்ட போதுபுத்தகங்களுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவேன்என்றாராம்.
நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஒரு அரசியல் பிரமுகர்உங்களுக்கு என்ன சலுகைகள் சிறைச்சாலையில் வேண்டும்?” என்று கேட்டபோதுபுத்தகங்கள் படிப்பதற்கு அனுமதித்தால் போதும்என்றாராம். “மகாத்மா காந்தியின் சத்திய சோதனையைப் படித்த பின்புதான் கறுப்பின விடுதலைக்காக போராடும் எண்ணமே எனக்கு உதித்ததுஎன்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றும் இங்கு கவனிக்கத்தக்க ஒன்றே!
மனிதனது கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?” என்று ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்ட பொழுதுபுத்தகங்கள்தான்!” என்றாராம்.
நீண்டு செல்லும் பட்டியலிலும் பார்க்க அப்பட்டியல்கள் தருகின்ற பாடங்களே உற்று நோக்கத் தக்கவை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாம் பிறந்ததற்கான நன்றிக் கடனை தமது நாட்டிற்கோ, தமது இனத்திற்கோ அல்லது உலகத்திற்கோ அதியுச்ச அளவில் திருப்பிச் செலுத்தி இவ்வுலக வரலாற்றில் இடம்பிடித்தவர்கள். அவ்வாறானவர்கள் வாசிப்புத் தொடர்பாகக் கொண்டிருந்த சிந்தனைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்தியம்பவில்லையா?
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்,
ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது உலகின் ஒரு ஜன்னலைத் திறக்கிறோம்,
புத்தகம் என்பது பையில் சுமந்து செல்லும் ஒரு பூந்தோட்டம் (சீனப் பழமொழி),
புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கின்றோம். அதை மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது நீண்ட கால நண்பனைச் சந்திக்கின்றோம்  (சீனப் பழமொழி),
ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள் (அரேபியப் பழமொழி) ,
போன்ற உலகப் பழமொழிகள் பலவும் வாசிப்பின் முக்கியத்துவத்தை சுட்டி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாசிப்பின் முக்கியத்துவம் இலங்கை அரசினாலும் உணரப்பட்டு, வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுவாக முக்கியமான நிகழ்வுகள் ஒரு நாள் மாத்திரமே (சர்வதேச தினங்கள் யாவும் இதற்குச் சான்றாகும்) கொண்டாடப்படுவது வழமையானது. ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் கருதி இலங்கையில் ஒக்ரோபர் மாதம் முழுவதும் வாசிப்பு மாதமாகப் பிரகரணப்படுத்தப்பட்டிருப்பதே வாசிப்பின் முக்கியத்துவத்திற்கு சிறந்த சான்றாகும்.
இவ்வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கட்டியெழுப்புதல் அவசியமானது. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதென்பது ஒரு குழந்தைக்கு உணவு உண்ணக் கற்றுக் கொடுப்பதற்கு ஈடானது. குழந்தைக்கு உணவு உண்பதற்கு கற்றுக் கொடுக்கும் வித்தையை நன்கு கற்றுத் தேர்ந்தவர் ஒரு தாயே! அதே போன்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதில் ஒவ்வொரு ஆசிரியரும் வித்தகராக இருத்தல் அவசியம்.
ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டது போல வாசிப்பு என்பது ஒரு செயன்முறை. இச் செயன்முறையையை ஒரு ஒழுங்கான முறையிலேயே செயற்படுத்த வேண்டும்.
ஒரு குழந்தை பேசக் கற்றுக் கொள்ளும் போதே வாசிக்கவும் பழக்குதல் வேண்டும். ஆரம்பத்தில் படங்கள் மட்டும் கொண்ட புத்தகங்களை வழங்குதல், பிள்ளை எழுத்துக்களைத் தெரிந்து கொண்ட பின்னர் படங்களையும் பெயர்களையும் கொண்ட புத்தகங்களை அறிமுகம் செய்தல், சித்திரக் கதைப் புத்தகங்களை அறிமுகம் செய்தல், சிறிய புத்தகங்களை அறிமுகம் செய்தல் என்றவாறாக இச் செயன்முறை விருத்தி செய்யப்பட வேண்டும்.
இச்செயன்முறை மூலம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரம்பித்துப் பின்னர் படிப் படியாக அதிகரிக்கச் செய்து, வாசிப்புப் பழக்கம் மிக்க சமுதாயம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஒரு சமுதாயத்தையே நல்வழிப்படுத்தலாம்.
உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போது பிஸ்கட் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்குப் பதிலாகப புத்தகங்களைக் கொண்டு செல்லும் பழக்கம் எம்மிடையே ஏற்படவேண்டும்!
பிறந்தநாள் பரிசாகவும் நினைவுப் பரிசாகவும் புத்தகங்களை வழங்குகின்ற ஒரு சமுதாயம் எம்மிடையே தலை தூக்க வேண்டும்!
அப்போதுதான் மனிதனின் அறிவுத் தேடல் நிறைவு செய்யப்பட்டு, எமது சிறார்களும்இ இளைஞர் - யுவதிகளும் தவறான வழியில் செல்வதிலிருந்து தடுத்து நிறுத்த முடியும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குறைந்து செல்லும் வாசிப்புப் பழக்கத்திலிருந்து மீண்டெழுந்து, வாசிப்பில் ஈடுபடுவதும், மற்றையவர்களை ஈடுபட வைப்பதும் காலத்தின் தேவையாகும். இது நம் ஒவ்வொருவரினதும் சமுதாயக் கடமையுமாகும்.                                

 தேடலும் ஆக்கமும் :
ம.நிரேஸ்குமார்
ஆசிரிய கல்வியியலாளர்,
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி,
கோப்பாய்.